புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
|புதுக்கோட்டையில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 7-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை வேன் மற்றும் பஸ்களில் அழைத்து செல்லப்படுவதில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளும் பணி நடத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தை சாமி (இலுப்பூர்), வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய்சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா உள்பட அதிகாரிகள் கொண்ட குழுவினர் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
543 வாகனங்கள்
இந்த ஆய்வின் போது தனியார் பள்ளி பஸ், வேன்களில் பிரேக், அவசர வழி கதவு, தீத்தடுப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள், இருக்கைகள் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என பார்வையிட்டனர். மேலும் வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் ஒரு சில வாகனங்களில் காலாவதியான முதலுதவி பெட்டிகளையும், தீத்தடுப்பு கருவிகளையும் வைத்திருந்தனர். அதற்கு பதிலாக புதியவை வாங்கி வைக்க அறிவுறுத்தினர். இதேபோல் வாகனங்களில் பின்பகுதியில் சைடு இன்டிகேட்டர் லைட்டுகள் சரியாக எரிகிறதா? என பார்வையிட்டனர். இதில் ஒரு வாகனத்தில் இன்டிகேட்டர் லைட் உடைந்திருந்ததில் அதனை சரி செய்து வர அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மாவட்டத்தில் மொத்தம் 543 பள்ளி வாகனங்கள் உள்ளன. இதில் மொத்தம் 336 வாகனங்கள் ஆய்வுக்கு வந்திருந்தன. இதில் ஆய்வின் போது அனைத்தும் சரியாக இருந்த 314 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. 22 வாகனங்களில் குறைபாடு இருந்ததால் அவற்றை சரி செய்யுமாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்து வந்து காண்பித்த பின் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.