< Back
மாநில செய்திகள்
தனியார் பள்ளி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தனியார் பள்ளி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
2 July 2022 11:54 PM IST

தனியார் பள்ளி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பஸ்கள் ஆய்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், தனியார் பள்ளி பஸ்களில் அதிகாரிகளால் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளவில்லை. இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆய்வு செய்யும் பணிகள் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு தண்ணீர்பந்தலில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்திலும், அரியலூர் மாவட்டத்துக்கு அரியலூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி இடத்திலும் நேற்று இந்த ஆய்வு பணி நடந்தது.

அவசர கால வழியின் செயல்பாடு

அரியலூரில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் தனியார் பள்ளி பஸ்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெரம்பலூரில், மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன், வட்டார போக்குவரத்து அதிகாரி கணேசன், வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி, கண்காணிப்பாளர் வேலாயுதம் ஆகியோர் தனியார் பள்ளி பஸ்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தனியார் பள்ளி பஸ்களின் ஆய்வின்போது பள்ளி பஸ்களில் அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும், பள்ளி பஸ்களில் அவசர கால வழியின் செயல்பாடு குறித்தும், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

5 பஸ்களுக்கு உரிமம் ரத்து

ஆய்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 57 தனியார் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 374 பஸ்களில், முதற்கட்டமாக 175 பஸ்கள் அதிகாரிகளால் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் 150 பஸ்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 20 பஸ்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அவற்றை 7 நாட்களுக்குள் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 பஸ்களின் உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 151 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 14 குறைபாடுடைய பஸ்கள் கண்டறியப்பட்டு, அதனை சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும்.

தனியார் பள்ளி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு

பெரம்பலூரில் முன்னதாக விபத்து போன்ற அவசர காலங்களில் டிரைவர்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூலமாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்