திருவண்ணாமலை
விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு
|ஆரணியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆரணி
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு ஆரணி நகரில் விழா குழுவினர், இந்து முன்னணி அமைப்பினர் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
பின்னர் 5-ம் நாளான 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் நகரின் முக்கிய வீதி வழியாக கொண்டு வரப்பட்டு ஆரணியை அடுத்த பையூர் பாறை குளத்தில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இணைந்து பாறை குளத்தின் அருகே தடுப்பு பணிகளும், பேரிகார்டு அமைப்பது, வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் விளக்குகள் பொருத்துவது, கிரேன் மூலம் விநாயகர் சிலைகளை தூக்கி குளத்தில் கரைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அங்குள்ள இடத்தை சுத்தம் செய்யும் பணியையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
அப்போது பையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சரவணன், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், ஷாபூதீன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.