< Back
மாநில செய்திகள்
பழனி வையாபுரிகுளத்தில் அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி வையாபுரிகுளத்தில் அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
12 July 2022 9:07 PM IST

பழனி வையாபுரி குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பழனி நகரின் மையப்பகுதியில் வையாபுரிகுளம் உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தின் மூலம் 1,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் வையாபுரி குளத்தில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வந்தது. மேலும் ஆக்கிரமிப்பு காரணமாக குளத்தின் பரப்பளவு சுருங்கி விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதனால் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பழனி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை‌ அகற்ற வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து வையாபுரிகுளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இந்த பணிகளை பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது குளத்தின் எல்லைகள் கண்டறியப்பட்டு கற்கள் ஊன்றப்பட்டது. தொடர்ந்து கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணி நடந்தது. அப்போது குளத்தின் கிழக்கு பகுதியில் நகராட்சி சார்பில் கட்டண கழிப்பறை குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது‌ தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை 3 வாரத்துக்குள் இடித்து அகற்ற வேண்டும் என்று ஆர்.டி.ஓ. எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், வையாபுரி குளத்தில் முதற்கட்டமாக வணிக நோக்கத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படும். அதன்பிறகு குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்பாக அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்