விருதுநகர்
பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு
|பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பெரிய புளியம்பட்டி, பாலையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம், பாலவனத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மானாவாரி விவசாயம் நடைபெற்று வரும் இப்பகுதியில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், சிகப்பு சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தற்போது அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பயிர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களை செயல்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காட்டு பன்றிகள் இங்கு உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் மான்களும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மழை பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலையில் தற்போது நல்ல மழை பெய்தும் காட்டு பன்றிகள் மற்றும் மான்களால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பெரிய புளியம்பட்டி காட்டுப்பகுதியில் காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் காட்டு பன்றிகளால் ஏற்படும் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.