சென்னை
மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் எந்திரம் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக அதிகாரிகள் தகவல்
|மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் எந்திரம் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத்தில் 4-வது வழித்தடத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. மேல் மற்றும் கீழ் சுரங்கங்கள் இரண்டையும் கருத்தில் கொண்டு தோராயமாக 16 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்த உள்ளன.
வழித்தடம் 4-ல் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் எந்திரத்தை தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் நடந்தது. மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் அர்ச்சுனன் (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு) மற்றும் பொது ஆலோசகர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.