திருவள்ளூர்
திருத்தணியில் ரூ.110 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரம் - 2 மாதத்திற்குள் முடியும் என அதிகாரி தகவல்
|திருத்தணியில் ரூ.110 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 2 மாதத்திற்குள் பணிகள் முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திருத்தணி நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திருத்தணி நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு ரூ.109.68 கோடி மதிப்பீட்டில், பாலாற்றின் திருபாற்கடல் பகுதியிலிருந்து நீர் உறிஞ்சி, ஆழ்துளை கிணறுகள் அமைத்து, 86 கிலோமீட்டர் தூரம் குழாய்கள் அமைத்து மக்களுக்கு தினமும் 10 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் வழங்க கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக திருத்தணி, சேகர்வர்மா நகரில் 3.95 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தேக்கும் நீர் ஊந்து நிலையம், இந்திரா நகர் பகுதியில் 10.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருத்தணி அடுத்த மாம்பாக்கம்- கன்னிகாபுரம் இடையே 1.5 கிலோமீட்டர் வனப்பகுதியில் ராட்சத குழாய்கள் புதைப்பதற்கு வனத்துறை அனுமதி கிடைக்காததால் மூன்று மாதங்களுக்கு மேலாக கூட்டுக் குடிநீர் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாம்பாக்கம் - கன்னிகாபுரம் வனப்பகுதியில் குழாய்கள் புதைப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியதால், தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் குழாய் பதிக்கும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்:- கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக திருத்தணி நகருக்கு தண்ணீர் கொண்டு வரும் பணிகள், தற்போது 90 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் 2 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த பணிகள் நிறைவடைந்தால் திருத்தணியில் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படும் என தெரிவித்தார்.