< Back
மாநில செய்திகள்
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது - ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது - ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
6 Nov 2022 3:45 AM IST

பொதுமக்கள் தரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் துணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.மோகன்ராஜ். இவர் பணியில் இருந்தபோது, கடந்த 2016-ம் ஆண்டு பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என்பவரிடம் ரூ.10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி செலுத்த அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது.

இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அப்போதைய தலைமைச் செயலாளரிடம் பைனான்சியர் போத்ரா புகார் செய்திருந்தார்.

வழக்குப்பதிவு

புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் போத்ரா கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில், பைனான்சியர் போத்ரா இறந்து விட்டதால், அந்த வழக்கை அவரது மகன் ககன்போத்ரா தொடர்ந்து நடத்தினார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, புகார் கொடுத்த காலகட்டத்தில், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கையை தலைமைச் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் தரும்போது, எந்த ஒரு கால தாமதமும் இல்லாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறினால், அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கைபோய்விடும், மேலும் உடனடி நடவடிக்கைகள் எடுக்காமல் தவிர்ப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. இந்த மனுவை முடித்து வைக்கிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்