செங்கல்பட்டு
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வர உள்ளதால் 3 நாட்கள் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தல்
|ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வர உள்ளதால் 3 நாட்கள் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
கலந்தாய்வு கூட்டம்
ஜி 20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி 20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் வருகிற 31-நதேதி, பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.
மாமல்லபுரம் வர உள்ளனர்
இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இவர்கள் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டுகளிக்க வருகை தர உள்ளனர்.
இதையடுத்து மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை தமிழக கலாசார, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அப்புறப்படுத்த வேண்டும்
வெளிநாட்டு விருந்தினர்கள் வர இருப்பதால் மாமல்லபுரம் ஐந்துரதம் சாலை, கடற்கரை சாலை, அா்ச்சுனன் தபசு சாலை உள்ளிட்ட பகுதிகளின் நடைபாதை வியாபாரிகளை அழைத்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் பேசினர்.
அப்போது ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் வர இருப்பதால், திடீரென புராதன சின்னங்களை அவர்கள் சாலை மார்க்கமாக நடந்து சென்று பார்க்கும்போது நடைபாதை கடைகளால் இடையூறு ஏற்படும் என்பதால், முக்கிய சாலைகளில் உள்ள நடைபாதை கடைகள் வருகிற 31-ந்தேதி பிப்ரவரி 1, 2 ஆகிய 3 நாட்கள தாங்களாகவே அப்புறப்படுத்த வேண்டும். விருந்தினர்கள் வந்து சென்ற பின்னர் அவரவர்கள் தங்கள் கடைகளை மீண்டும் அமைத்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தினர். இதற்கு நடைபாதை வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அதிகாரிகளிடம் உறுதி அளித்தனர்.
மேலும் மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் ஒலி பெருக்கி மூலமும் முக்கிய சாலைகளில் இது குறித்த அறிவிப்புகள் அடிக்கடி அறிவிக்கப்பட்டு இருந்ததை காண முடிந்தது.