கடலூர்
விருத்தாசலம்ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
|விருத்தாசலம்ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
விருத்தாசலம்,
விருத்தாசலம் சேலம் சாலையில் அமைந்துள்ள மணலூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியை சிலர் ஆக்கிரமித்து குடிசைகள், கொட்டகைகள் அமைத்தும், ஆடு, மாடுகள் கட்டி வளர்த்து வந்தனர். மேலும் அப்பகுதி மக்கள் சிலர் அங்கு குப்பை கழிவுகளை கொட்டி வந்ததால், கடும் துர்நாற்றம் வீசி வந்ததுடன், மழைக்காலங்களில் நோய் பரவும் அபாயம் ஏற்படும் நிலை உருவானது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் பாலத்தின் கீழ் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் நகராட்சி உதவி செயற்பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் சரவணன், நகராட்சி ஆணையாளர் செல்வம், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், துப்புரவு மேற்பார்வையாளர் முத்தமிழ்செல்வன், நகரமைப்பு ஆய்வர் திலகவதி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் மேம்பால பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். மேலும் மீண்டும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஆக்கிரமிப்புகளில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் கவிதா எச்சரித்து சென்றார்.