அரியலூர்
சத்துணவு மையங்களில் அதிகாரி திடீர் ஆய்வு
|தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் சத்துணவு மையங்களில் சமையல் கூடங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோடங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தா.பழூர் ஆதிதிராவிடர் நல பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சத்துணவு மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். சமையல் கூடங்கள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும், பராமரிப்பு பணிகள் நடைபெற்ற சமையல் கூடங்களில் பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொறுப்பு) பாலமுரளி, மாவட்ட செயற்பொறியாளர் பிரபாகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி, கோடங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.