கரூர்
வெள்ளியணை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சீரமைப்பு பணிகளை அதிகாரி ஆய்வு
|வெள்ளியணை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சீரமைப்பு பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம் வெள்ளியணையில் தமிழகத்தின் முதல் பெரியார் நினைவு சமத்துவபுரம் கடந்த 1999-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சமத்துவபுரத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழும் வகையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு, தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவையும் ஏற்படுத்தி தரப்பட்டது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வந்த நிலையில், வீடுகளும், அடிப்படை கட்டமைப்பு வசதி கட்டிடங்களும் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிக்கப்படவில்லை. இதனால் கட்டிடங்களில் சேதாரம் ஏற்பட்டும், சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்தும், சிறுவர் விளையாட்டு பூங்கா புதர் மண்டியும்போயின. இதனை சீரமைத்து தர வேண்டி இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அரசால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அனைத்து சமத்துவபுரங்களும் சீரமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி வெள்ளியணை சமத்துவபுரத்தில் முதல் கட்டமாக சாலைகள் புதுப்பிக்கப்பட்டும், வீடுகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி கட்டிடங்கள் அனைத்தும் மராமத்து பணிகள் செய்யப்பட்டும் வருகின்றன. மேலும் குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டும் வருகின்றன. இந்த சீரமைப்பு பணிகளை நேற்று மாவட்ட திட்ட இயக்குனர் மந்திராச்சலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், பாலச்சந்தர், என்ஜினீயர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.