கள்ளக்குறிச்சி
தியாகதுருகம் பகுதியில் திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
|தியாகதுருகம் பகுதியில் திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.3 கோடியே 55 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை ஊராட்சிகள் திட்ட இயக்குனர் செல்வராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரைத்தளத்தில் நடைபெற்ற பணிகள் குறித்தும், கட்ட வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரியிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளையும், அதேபகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி, குடிநீர் குழாய்கள், கழிவுநீர் கால்வாய் ஆகியவைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டும் வீடுகள் மற்றும் நிறைவடைந்த சிமெண்டு சாலைகளை பார்வையிட்ட அவர், குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக பூர்த்தி செய்து தரவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதவி திட்ட அலுவலர் சீனுவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், உதவி பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், விஜயன், தென்றல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.