திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
|கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார தலைவர் எம்.அண்ணாமலை தலைமை தாங்கினார். அப்போது அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த பார்த்திபன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், வட்ட கிளை செயலாளர் முருகன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.