சென்னை
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அதிகாரிகள், பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் - மேயர் பிரியா உத்தரவு
|வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதில், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் (வருவாய்) லலிதா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது:-
மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் முடியாத இடங்களில் விரைவாக பணிகளை முடித்து இணைப்பு ஏற்படுத்த வேண்டும். புதிதாக சாலை வெட்டுக்கள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து நிலைகளிலும் 23 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். 22 சுரங்கப் பாதைகளில் மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
மழைக் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலை ஓரங்களில் கைவிடப்பட்ட 292 வாகனங்கள் இதுவரையில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.