< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தினத்தந்தி
|
21 Feb 2023 12:15 AM IST

சேந்தமங்கலம் பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா காளப்பநாயக்கன்பட்டி, வாழவந்திகோம்பை, கோனூர், பொம்மசமுத்திரம், செல்லியம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்கட்டமாக காளப்பநாயக்கன்பட்டியில் தார்சாலை அமைக்கும் பணியியையும், வாழவந்திகோம்பை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, விவரங்களை சரிபார்த்தார். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யப்பட்ட பல்வேறு சான்றிதழ்கள் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை கணினியில் பார்வையிட்டு, விண்ணப்பம் பெறப்பட்ட நாள் மற்றும் சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு வருவாய் ஆய்வாளர் பரிந்துரை செய்த நாள் விவரம் ஆகியவற்றை சரிபார்த்தார்.

ஆரம்ப சுகாதார நிலையம்

முன்னதாக பேளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர் விவரங்களையும், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்