< Back
மாநில செய்திகள்
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்; அதிகாரி தகவல்
தேனி
மாநில செய்திகள்

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்; அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
23 Sept 2022 11:05 PM IST

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என்று தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2022-23-ம் ஆண்டு தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, கொத்தமல்லி, முட்டைக்கோஸ், தக்காளி ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,371.55 பிரிமியம் தொகை செலுத்த அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி கடைசி நாள். கத்தரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,185.60 பிரிமியம் செலுத்த வேண்டும். இதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதி கடைசி நாள்.

முட்டைக்கோஸ் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,155.95 பிரிமியம் தொகை, தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு பிரிமியம் ரூ.871.90 செலுத்த ஜனவரி 31-ந்தேதியும், கொத்தமல்லி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.637.25 செலுத்த ஜனவரி 18-ந்தேதியும் கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்கள், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றின் மூலம் பயிர்காப்பீடு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்