தேனி
முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தால் 'ருசியான உணவை வயிறார சாப்பிடுகிறோம்'; மனமார பாராட்டும் மழலைச் செல்வங்கள்
|முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தால் ருசியான உணவை வயிறார சாப்பிடுவதாக மழலைச் செல்வங்கள் மனமார பாராட்டினர்.
காலை சிற்றுண்டி திட்டம்
தமிழகத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர் காமராஜர். குக்கிராமங்களிலும் பள்ளிக்கூடங்களை திறந்த காமராஜர், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதனை சத்துணவு திட்டமாக எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தினார். இந்த திட்டங்களுக்கு முத்தாய்ப்பாக மகுடம் சூட்டுவதுபோல் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, அண்ணா பிறந்தநாளான கடந்த 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் இந்த திட்டம் முதற்கட்டமாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 51 அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,342 மாணவர்கள், 1,291 மாணவிகள் என மொத்தம் 2,633 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சருக்கு குவியும் பாராட்டு
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திங்கட்கிழமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி மற்றும் சாம்பார், புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி, சாம்பார், ரவா கேசரி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த காலை உணவு திட்டம் மழலைச் செல்வங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. விதவிதமாக உணவு வழங்கப்படுவதால் காலையில் ஆர்வத்துடன் அவர்கள் பள்ளிக்கு வருவதை பார்க்க முடிகிறது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் இந்த திட்டத்தை கொண்டு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
உற்சாகமாக படிக்கிறார்கள்
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிகளின் ஒன்றான குமணன்தொழு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி கூறுகையில், "கிராமப்புற பள்ளி என்பதால் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். காலையில் சீக்கிரம் வேலைக்கு செல்வார்கள் என்பதால் பெரும்பாலும் குழந்தைகள் பழைய சாதம் சாப்பிடுவதும், சிலர் சாப்பிடாமல் காபி, பால், பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வருவதுமாக இருந்தனர். வகுப்பறையில் பல மாணவர்கள் காலையிலேயே சோர்வாக அமர்ந்து இருப்பார்கள்.
ஆனால் இப்போது முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தால் வயிறார மாணவ, மாணவிகள் சாப்பிடுகிறார்கள். இந்த திட்டத்தை தொடங்கிய முதல்-அமைச்சருக்கு அனைத்து ஆசிரியர்கள் சார்பிலும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
4-ம் வகுப்பு மாணவி நிவேதா கூறுகையில், "காலையில் வீட்டில் சோறு தான் சமைப்பாங்க. எப்போதாவது இட்லி, தோசை செய்வாங்க. பள்ளிக்கூடத்தில் இப்போதெல்லாம் புதுசு புதுசா சாப்பாடு தாராங்க. கிச்சடி, சாம்பார் எல்லாம் சூப்பரா இருக்கு. முதல்-அமைச்சர் ஸ்டாலின் தாத்தாவை நான் டி.வி.யில் தான் பார்த்து இருக்கேன். நேரில் பார்த்து அவருக்கு நன்றி சொல்லணும்னு ஆசையா இருக்கு" என்றார்.
ருசியான சாப்பாடு
3-ம் வகுப்பு மாணவி பிரியங்கா கூறுகையில், "பள்ளிக்கூடத்துக்கு சீக்கிரம் வரணும்னு, நிறைய நாள் சாப்பிடாம வந்து இருக்கேன். ஆனால் இப்போது தினமும் பள்ளிக்கூடத்தில் விதவிதமாக சாப்பாடு தாராங்க. நானும் என் பிரண்ட்ஸ் எல்லோரும் சீக்கிரம் பள்ளிக்கூடத்துக்கு வந்து சாப்பிடுறோம். சாப்பாடு ரொம்ப டேஸ்ட்டா இருக்கு. ருசியான சாப்பாட்டை நிறைய சாப்பிடுறேன்" என்றார்.
4-ம் வகுப்பு மாணவர் சாய்தீனக் கூறுகையில், "ஓட்டலில் தான் விதவிதமான சாப்பாடு கிடைக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போ பள்ளிக்கூடத்திலும் விதவிதமா சாப்பாடு தாராங்க. அது எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு. தினமும் பள்ளிக்கூடத்துக்கு வர ஆசையா இருக்கு. வயிறு நிறைய சாப்பிட்டுட்டு பிரண்ட்ஸ் எல்லோரும் ஓடிப்பிடித்து விளையாடுவோம். அப்புறம் கிளாஸ் ரூம்க்கு போய் படிப்போம்" என்றார்.
அதிகாரிகள் கண்காணிப்பு
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அடிக்கடி திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு உணவின் தரத்தை ஆய்வு செய்து வருகிறார். இதுகுறித்து கலெக்டர் முரளிதரன் 'தினத்தந்தி' நிருபருக்கு அளித்த பேட்டியில், "இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு 3 முறை பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்துள்ளேன். உணவை சாப்பிட்டு பார்த்தேன். சுவையாகவும், தரமாகவும் இருக்கிறது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு பள்ளிக்கு மாணவ, மாணவிகள் காரணமின்றி விடுமுறை எடுப்பது குறைந்துள்ளது. இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஆகியோர் தினமும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன். அத்துடன் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வுகள் செய்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏழை, எளிய குடும்பத்தின் குழந்தைகளுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது" என்றார்.
செல்போன் செயலி
இந்த திட்டத்தில் குறைகள் இருந்தால் உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
காலை உணவு சமைத்தல், பரிமாறும் காட்சிகளை இந்த செயலியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்கின்றனர். உணவு தரமாக இருந்ததா? எத்தனை மாணவர்கள் சாப்பிட்டார்கள்? என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அளித்து அனுப்புகிறார்கள்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தேனி மாவட்டத்தில் தற்போது கடமலை-மயிலை ஒன்றியத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 8 ஒன்றியங்கள் உள்ள நிலையில், 7 ஒன்றியங்களில் இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. மகத்தான இந்த திட்டத்தை மற்ற ஒன்றிய பகுதிகளிலும் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உணவு தயாரிப்பு
கடமலை-மயிலை ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளிலேயே சமையல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த உணவு தயாரிக்க மகளிர் திட்டத்தின் மூலம் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சுயஉதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சமையல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற சமையலர்களால் காலை உணவு தயாரித்து பரிமாறப்படுகிறது.