கோயம்புத்தூர்
ஓ.இ. நூற்பாலைகளில் நூல் உற்பத்தி நிறுத்தம்
|கோவையில் ஓ.இ. நூற்பாலைகளில் நூல் உற்பத்தியை நிறுத்தி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.4¼ கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை
கோவையில் ஓ.இ. நூற்பாலைகளில் நூல் உற்பத்தியை நிறுத்தி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.4¼ கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கழிவுப்பஞ்சு விலை உயர்வு
கழிவுப்பஞ்சு விலை உயர்வை குறைக்கக்கோரி ஓபன் எண்ட் மில்கள் (ஓ.இ. நூற்பாலைகள்) உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தை தொடங்கினார்கள். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ராஜபாளையம், ஈரோடு மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஓ.இ. நூற்பாலைகள் உள்ளன.
கழிவுப்பஞ்சு விலை உயர்வால் உற்பத்தி செய்யப்படும் ஓ.இ. நூலுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தினால் நேற்று முதல் தமிழகம் முழுவதும் உற்பத்தி நிறுத்தம் தொடங்கப்படும் என ஓ.இ. நூற்பாலை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை 8 மணி முதல் கோவை மாவட்டம் சோமனூர் சுற்று வட்டாரத்தில் உள்ள ஓ.இ. நூற்பாலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறியதாவது:-
உற்பத்தி நிறுத்தம்
நூற்பாலைகளில் இருந்து கிடைக்கும் கழிவு பஞ்சை ஓ.இ. நூற்பாலைகள் வாங்கி அதில் இருந்து நூல் தயாரித்து காடாதுணி, டவல், மிதியடி, லுங்கி உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்து வருகின்றன. கடந்த ஒரு ஆண்டாக பருத்தி விலை உயர்வு காரணமாக கழிவுபஞ்சு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம் பருத்தி விலையில் இருந்து 40 முதல் 50 சதவீதம் வரை தான் கழிவு பஞ்சு விலை இருந்தது. ஆனால் தற்போது ஒரு கிலோ கழிவு பஞ்சு ரூ.110 வரை உயர்ந்து உள்ளது. இந்த விலைக்கு இணையாக ஓ.இ. நூல் உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. சமீப காலமாக பருத்தி விலை குறைந்தாலும் கழிவுபஞ்சு விலை மட்டும் குறையவில்லை.
மேலும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு தற்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஒருபுறம் கழிவுபஞ்சு விலை உயர்வு, மறுபக்கம் மின் கட்டண உயர்வு போன்றவற்றால் ஓ.இ. நூற்பாலைகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது கிரே ஓ.இ. நூல் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளோம். வருகிற 10-ந்தேதிக்கு மேல் கலர் ஓ.இ.நூல் உற்பத்தி நிறுத்தம் குறித்து கூட்டுக்கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவெடுப்போம்.
ரூ.4¼ கோடி வர்த்தகம் பாதிப்பு
கழிவுப்பஞ்சு விலை குறையாமல், மின் கட்டண உயர்வு குறையாமல் ஓ.இ. நூல் மில்களை இயக்க இயலாது. எனவே மத்திய, மாநில அரசுகள் எங்கள் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தி நிறுத்தத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1½ லட்சம் தொழிலாளர்கள் ஓ.இ.நூல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 70 ஆயிரம் கிலோ வரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.4 கோடியே 32 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.