ஒடிசா ரெயில் விபத்து - தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு
|தமிழ்நாடு அரசு சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
புவனேஸ்வர்,
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.
இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரெயில் விபத்தால் இதுவரை 179 பேர் காயமடைந்து உள்ளதாகவும், சுமார் 50 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு வந்த ரயில் விபத்துக்குள்ளான நிலையில், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் தொலைபேசியில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும் தமிழக அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு நாளை ஒடிசா செல்ல உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் மீட்பு மற்றும் உதவிப்பணிகளுக்காக அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு நாளை ஒடிசா செல்கின்றனர்
இந்த நிலையில் ரெயிலில் பயணித்தோர் விபரம் அறிந்துகொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அவசர உதவிக்காக 044-28593990, 9445869843 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.