< Back
மாநில செய்திகள்
ஒடிசா ரெயில் விபத்து; நாளை நடைபெறவிருந்த குமரி சங்கமம் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு - அண்ணாமலை அறிவிப்பு
மாநில செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து; நாளை நடைபெறவிருந்த 'குமரி சங்கமம்' பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு - அண்ணாமலை அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Jun 2023 7:19 PM IST

ஒடிசா ரெயில் விபத்து காரணமாக நாளை நடைபெறவிருந்த ‘குமரி சங்கமம்’ பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஒடிசாவில் நேற்று இரவு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி நேற்று இரவு 7 மணியளவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது.

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது.

அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.

அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து ரெயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வரவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தமிழக பாஜக சார்பில் குழு ஒடிசா செல்ல உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து காரணமாக நாளை நடைபெறவிருந்த 'குமரி சங்கமம்' பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ஒதிஷா மாநிலத்தில் நடந்த மனதை உலுக்கிய ரயில் விபத்தைக் கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர் நாகராஜா திடலில், நாளை (04/06/2023) நடைபெறவிருந்த 'குமரி சங்கமம்' பொதுக் கூட்டம், மற்றொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்