< Back
மாநில செய்திகள்
ஒடிசா ரெயில் விபத்து: 8 தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
மாநில செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து: 8 தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

தினத்தந்தி
|
5 Jun 2023 12:41 PM GMT

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய 8 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பூங்காக்கள், சாலை தடுப்புகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 924 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ரெபெக்ஸ் குழும இயக்குனர் அனில் ஜெயின் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது அரசு சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு மஞ்சப்பை திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மரம் நடும் நிகழ்ச்சி அரசு சார்பாகவும், தனியார் பங்களிப்புடனும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே, மக்கள் மரம் நடுவதில் பங்கேற்று அரசுக்கு உதவிபுரிய வேண்டும்.

ஒடிசாவில் இருந்து நான் கிளம்பும் போது 8 தமிழர்கள் பற்றிய ஒரு தெளிவு இல்லாமல் இருந்தது. சென்னை வந்த பின்னர் இரவு நான் அங்குள்ள அரசு அதிகாரிகளிடம் மீண்டும் பேசினேன். அப்போது 8 பேருமே பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்கள்.

இதில் 2 பேரிடம் நேரடியாக பேசி உள்ளோம். மீதியுள்ள 6 பேர் பாதுகாப்பாக இருப்பதாக உடன் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் பயணம் செய்த ரெயில் பெட்டி பாதிப்பில்லை என்றும் தெரியவந்துள்ளது. 6 பேரிடமும் இதுவரை பேசமுடியவில்லை. ஓரிரு நாட்களில் இதுகுறித்து தெளிவான பதில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்