< Back
மாநில செய்திகள்
ஒடிசா அரசு மேற்கொண்டுவரும் மீட்பு பணி, நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது - அமைச்சர் உதயநிதி
மாநில செய்திகள்

ஒடிசா அரசு மேற்கொண்டுவரும் மீட்பு பணி, நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது - அமைச்சர் உதயநிதி

தினத்தந்தி
|
4 Jun 2023 2:24 PM IST

ஒடிசாவில் சிகிச்சையில் உள்ளவர்கள், வீடு திரும்பியோரின் விவரங்களை கேட்டறிந்ததாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர்,

புவனேஷ்வர், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த இந்த திடீர் விபத்தால், ரெயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி உருக்குலைந்தன.

இதில் பலர் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிர் இழந்தனர் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 என்று நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 288 அல்ல என்றும் 275 தான் என்றும் ஒடிசா அரசு தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா கூறியிருந்தார். மேலும் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள்தாகவும், சிகிச்சை பெற்று வந்த 1,175 பேரில் 793 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒடிசாவில் சிகிச்சையில் உள்ளவர்கள், வீடு திரும்பியோரின் விவரங்களை கேட்டறிந்ததாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட குழுவினருடன் இரண்டாவது நாளாக இன்று ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

புவனேஸ்வர் ராஜீவ் பவனிலுள்ள ஓடிசா சிறப்பு மீட்பு ஆணையர் அலுவலகத்தில், அம்மாநில தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் ஜெனா அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, படுகாயமுற்று சிகிச்சையில் உள்ளவர்கள், சிகிச்சை முடித்து திரும்பியோரின் விவரங்களை கேட்டறிந்தோம்.

ஒடிசா அரசு மேற்கொண்டுவரும் மீட்பு பணி நடவடிக்கைகள் நம்பிக்கையையும், ஆறுதலையும் தருவதாக அமைந்துள்ளது" என்று அதில் அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்