தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
|தீபாவளிக்கு மறுநாளான 25-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை நாளை (24-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வெளியூர், வெளிமாநிலங்களில் உள்ள பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு, இருந்தால், தீபாவளி அன்றிரவே பொது மக்கள் சென்னை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோரும் மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 25-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.