11 -ந்தேதி டெல்டா பகுதிகளில் முழுஅடைப்பு போராட்டம்
|டெல்டா பகுதிகளில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது .
தஞ்சை,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து கர்நாடகத்தில் விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள விஸ்வேஸ்வரய்யா பூங்காவில் 34-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கர்நாடக முதல்-மந்திரி மற்றும் பல அரசியல் தலைவர்களும், காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகியவற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கக்கூடாது என்று கூறிவருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்களை அரசியல் கட்சியினர் நடத்தினர்.
இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் வெளியிட்டுள்ளது.
இதில் கர்நாடகா அரசு மற்றும் கர்நாடகா மாநில பாஜகவை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மத்திய அரசு அலுவலகத்தின் முன்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.