கிருஷ்ணகிரி
பொதுவழி பாதையில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கடை இடித்து அகற்றம்
|கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பொதுவழி பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை இடித்து அகற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பொதுவழி பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை இடித்து அகற்றப்பட்டது.
ஆக்கிரமித்து கட்டிடங்கள்
கிருஷ்ணகிரியில், சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு அருகில், அவதானப்பட்டியை சேர்ந்த ஒருவர், தனக்கு சொந்தமான நிலத்தில் கடை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இதில், நகராட்சிக்குட்பட்ட பொது வழிப்பாதையையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியது தெரிந்தது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, சம்பந்தப்பட்ட நபரிடம் பலமுறை நோட்டீஸ் அளித்தும் அவர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இடித்து அகற்றம்
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, கடையின் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்து அகற்ற உத்தரவிட்டார்.
இது குறித்து கடை உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில், நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றப்பட்டன.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.