நாமக்கல்
இத்தனை ஆண்டுகள் இல்லாத வகையில் குமாரபாளையத்தை தண்ணீரில் மிதக்க வைத்த 'ஆக்கிரமிப்புகள்'
|இத்தனை ஆண்டுகள் இல்லாத வகையில் குமாரபாளையத்தை தண்ணீரில் மிதக்க வைத்த ஆக்கிரமிப்புகள். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரம் சுமார் 8 கி.மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த நகருக்கு மிக நெருக்கமாக தட்டாங்குட்டை, குப்பாண்டபாளையம் பஞ்சாயத்து பகுதிகளும், சேலம் மாவட்டம் கத்தேரி பகுதியும் உள்ளன. இந்த பகுதியில் பிரதான தொழிலாக விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை, ஆயத்த ஆடை தயாரிப்பு ஆகிய தொழில்கள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமார் 1½ லட்சம் பேர் வசித்து வருகின்றனர். தினமும் 50 ஆயிரம் பேர் வேலை தொடர்பாக குமாரபாளையம் வந்து செல்கின்றனர்.
குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல 2 ஓடைகள் உள்ளன. ஒரு ஓடை, சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா ஆலத்தூர் ரெட்டிபாளையம் சூரியன் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர், கத்தேரி பகுதியில் பெரும்பள்ளத்தில் சேர்கிறது. அங்கிருந்து ஓடை மூலம், நாமக்கல் மாவட்ட எல்லையான தர்மதோப்பு, குமாரபாளையம் நகரில் ஆனங்கூர் ரோடு, சுள்ளிமடை தோட்டம் வழியாக உடையார்பேட்டை வரை ஓடுகிறது. இந்த ஓடையின் நீளம் சுமார் 40 கி.மீட்டர் ஆகும். சுமார் 100 அடி அகலம் கொண்ட இந்த ஓடை, சிறிய ஆற்றுக்கு நிகரானது.
2 ஓடைகள் இணைகிறது
மற்றொரு ஓடை ஓலப்பாளையம் மசையன்காடு பகுதியில் தொடங்கி, ஓலப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர், குமாரபாளையம் நகராட்சி கம்பன் நகர், பாரதி நகர், காந்தி நகர், சின்னப்ப நாயக்கன்பாளையம் ராஜாஜி குப்பம், பஸ் நிலையம், கத்தாளை பேட்டை வழியாக உடையார் பேட்டை வந்தடைகிறது. இங்கு 2 ஓடைகளும் ஒன்றாக இணைகிறது.
முதல் ஓடை கிழக்கில் இருந்து மேற்காகவும், மற்றொரு ஓடை வடக்கில் இருந்து தெற்காகவும் உடையார்பேட்டையில் கூம்பு வடிவத்தில் வந்து இணைவதால் கூம்பு பள்ளம் என்று அழைக்கப்பட்டது. அவை பேச்சு வழக்கில் கோம்பு பள்ளம் என்றானது. பின்னர் அந்த ஓடை, மொல்லப்பாளையம், அப்பன் பங்களா, மணிமேகலை தெரு வழியாக சுமார் 2 கி.மீட்டர் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது.
ஆக்கிரமிப்பு
இந்த 2 ஓடைகளின் நீளம் குமாரபாளையம் நகர பகுதியில் மட்டும் சுமார் 15 கி.மீட்டர் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விட்டாலும், காவிரி ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதிகள் மட்டுமே பாதிக்கப்படும். ஆனால் கடந்த மாதம் (செப்டம்பர்) பெய்த மழையால் குமாரபாளையம் நகரமே தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. இரவு தூங்கி அதிகாலையில் விழித்த மக்களுக்கு தங்களது வீடுகளை வெள்ளம் சூழ்ந்து நின்றது அதிர்ச்சி அடைய செய்தது. உடனே மக்கள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு மேடான பகுதிக்கு சென்றனர். இதனால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஓடையின் மீது கட்டப்பட்ட சிறு, சிறு பாலங்கள் உடைந்து, பாரதி நகர், நகராட்சி பள்ளிக்கூடம், குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்குள் தண்ணீர் புகுந்தது.
இதுபோன்ற சம்பவம் குமாரபாளையம் நகரில் இதற்கு முந்தைய ஆண்டுகள் நடந்தது இல்லை. இந்த நிலை உருவானதற்கு ஓடை ஆக்கிரமிப்பும், ஓடை தூர்வாரப்படாததும் தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுருங்கி விட்டது
இதுகுறித்து கோட்டைமேடு ராஜேந்திரன்;- சுமார் 100 அடி அகலம் கொண்ட ஓடை, ஆக்கிரமிப்பு காரணமாக 20, 30 அடியாக சுருங்கி விட்டது. இந்த ஓடையையொட்டி சாயப்பட்டறை தொழிற்சாலைகள் நிறைய இயங்குகின்றன. கடந்த மாதம் பெய்த மழையால் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேரல்கள், கழிவுகள் துணிகள் அடித்து வரப்பட்டு ஆனங்கூர் ரோட்டில் உள்ள தரைப்பாலத்தில் அடைத்துக் கொண்டது.
இதனால் தரைப்பாலத்திற்கு மேல் சுமார் 5 அடி உயரம் வரை தண்ணீர் சென்றது. இதன் காரணமாக ஆனங்கூர் ரோடு, கணேஷ் கவுண்டர் தோட்டம், பெரியார் நகர், சுள்ளிமடை தோட்டம் போன்ற பகுதிகள் தண்ணீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டது. எனவே வருவாய் துறையினர் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
தூர்வார வேண்டும்
குமாரபாளையம் சுள்ளிமடை தோட்டம் பகுதியை சேர்ந்த கண்ணன்குமார்:- கடந்த மாதம் பெய்த மழையால் ஓலப்பாளையம் ஏரியின் ஒரு பகுதி உடைந்தது. மற்றொரு பகுதியில் வடிகால் ஓடையை சுருக்கி கட்டிடம் கட்டப்பட்டதால், சந்து பகுதிகளில் மழைநீர் புகுந்து குமாரபாளையம் நகரில் பெரும்பாலான குடியிருப்புகள் தண்ணீரில் மிதந்தன. 2 ஓடைகளும் மழைநீர் வடிந்து செல்ல முறையாக தூர்வாரப்படவில்லை. மரங்கள், செடி, கொடிகள் நிறைய முளைத்திருக்கிறது. நகரில் உள்ள இறைச்சி உள்ளிட்ட அனைத்து கழிவு பொருட்களையும் ஓடையிலேயே கொட்டி நீர்வழி பாதையை தடுக்கின்றனர். இதன் காரணமாக தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஓடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் ஓடைகள் முறையாக தூர்வாரப்பட வேண்டும்.