< Back
மாநில செய்திகள்
பல ஆண்டுகளாக பயன்படுத்திய பாதை ஆக்கிரமிப்பு; காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் பொதுமக்கள் மறியல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பல ஆண்டுகளாக பயன்படுத்திய பாதை ஆக்கிரமிப்பு; காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் பொதுமக்கள் மறியல்

தினத்தந்தி
|
31 Jan 2023 5:50 PM IST

காஞ்சீபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் மனு

காஞ்சீபுரம் அடுத்த ஆற்பாக்கம் ஊராட்சியில் உள்ள பேபி நகர் பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இங்கு 10 தொகுப்பு வீடுகள் மற்றும் 10 தனிநபர் வீடுகளும் உள்ளன. இப்பகுதி மக்களுக்காக பயன்படுத்தும் பாதையில் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பாதையை தனி நபர் ஒருவர் தன்னுடைய பட்டா இடம் என கூறி சிமெண்ட் பாதையை உடைத்து முள்வேலி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும், வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும் பலமுறை அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

சாலை மறியல்

இந்த நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் ஆற்பாக்கம் சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் மற்றும் மாநகரல் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததின் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்