< Back
தமிழக செய்திகள்
காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
அரியலூர்
தமிழக செய்திகள்

காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

தினத்தந்தி
|
22 Oct 2023 12:52 AM IST

மாவட்டத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையிலும் மற்றும் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்ற வீரவணக்க நாளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி உயிர்நீத்தவர்கள் நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அனைத்து போலீசாரும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து 66 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை சூப்பிரண்டு (ஆயுதப்படை பொறுப்பு) வெங்கடேசன், மாவட்ட கூடுதல் சூப்பிரண்டுகள் விஜயராகவன், அந்தோணி ஆரி, துணை சூப்பிரண்டுகள் சங்கர் கணேஷ், ரவிச்சந்திரன் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்