< Back
மாநில செய்திகள்
கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் - வழக்குப்பதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
மாநில செய்திகள்

கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் - வழக்குப்பதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

தினத்தந்தி
|
20 Jun 2023 1:31 PM GMT

விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அரசகுளத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசகுளத்தில் உள்ள கருப்பன்னசாமி கோவில் திருவிழாவின் போது கோர்ட்டு உத்தரவை மீறி ஆபாச நடனம் நடைபெற்றதாகவும், இந்த விழாவின் ஏற்பாட்டாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி கோவில் திருவிழாவின் போது ஆபாச நடனம் நடைபெற்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை நீதிபதி முன்பு சமர்ப்பித்தார்.

இதைப் பார்த்த நீதிபதி, கோவில் திருவிழாவில் இவ்வளவு மோசமாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். கோவில் என்பது இறைவணக்க வழிபாட்டிற்காக பொதுமக்கள் வரக்கூடிய இடமாக உள்ள நிலையில், அங்கு இவ்வளவு ஆபாசமாக நடனமாடும் போது காவல்துறை என்ன செய்தது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து அரசு தரப்பில், ஆபாச நடனம் ஆடியது தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைப் பார்த்த நீதிபதி, சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்து, விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, அதை அறிக்கையாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.



மேலும் செய்திகள்