திருச்சி
இறந்தவர் உடலை வாகனத்தில் பாதை வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு
|இறந்தவர் உடலை வாகனத்தில் பாதை வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முசிறி:
பாதை பிரச்சினை
தா.பேட்டை அருகே உள்ள வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 48). இவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான பணிகளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடங்கினர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி, இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும் பாதை தனக்கு சொந்தமானது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே இறந்தவரின் உடலை அந்த வழியாக தோளில் சுமந்து செல்வதற்கு அனுமதிப்பதாகவும், ஆனால் வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீசார், மண்டல துணை தாசில்தார் தனபாக்கியம், வருவாய் ஆய்வாளர் கீதாஞ்சலி, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சஞ்சீவி, தா.பேட்டை ஒன்றிய ஆணையர் (கிராம ஊராட்சி) குணசேகரன், ஒன்றிய குழு தலைவர் ஷர்மிளா பிரபாகரன், துணைத் தலைவர் மல்லிகா பெரியசாமி, ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன் ஆகியோர் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை சமரசம் செய்த அதிகாரிகள், வண்டி பாதையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்வதற்கு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. நீதிமன்றத்தில் உரிய ஆணை பெற்றவுடன் பாதை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கண்டு கொள்ளலாம். தற்போது இறந்தவர் உடலை கொண்டு செல்ல யாரும் தடை செய்யக்கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் கொண்டு பாதை சீரமைக்கப்பட்டது. பின்னர் விஜயகுமாரின் உடல் அந்த வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.