< Back
மாநில செய்திகள்
பதாகையை அகற்றியதற்கு எதிர்ப்பு: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் காவல் நிலையத்தில் புகார்.!
மாநில செய்திகள்

பதாகையை அகற்றியதற்கு எதிர்ப்பு: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் காவல் நிலையத்தில் புகார்.!

தினத்தந்தி
|
27 Jun 2023 2:59 PM IST

தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல், பதாகையை அதிகாரிகள் அகற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழாவையொட்டி 4 தினங்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் தீட்சர்கள் சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதனை தொடர்ந்து பதாகையை அகற்றச்சென்ற இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கும், தீட்சிதர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது. போலீசார் உடன் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து பதாகையை அகற்றினர்.

பதாகையை அகற்ற தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துடன், பதாகையை அகற்றுவதை தடுத்து வாக்குவாதம் செய்தனர். இதனை தொடர்ந்து, அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தீட்சிதர்கள் வைத்த பதாகை முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டுள்ளது என்றும், பதாகையை அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல், பதாகையை அதிகாரிகள் அகற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய விசாரணை நடத்தி, அதன் பிறகு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிதம்பரம் சப் கலெக்டர் மற்றும் தீட்சிதர்கள் இடையே கோவில் வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்