< Back
மாநில செய்திகள்
தற்கொலை செய்த இளம்பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தற்கொலை செய்த இளம்பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

தினத்தந்தி
|
25 April 2024 1:41 AM IST

ஆணவக்கொலையில் கணவரை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது

சென்னை,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 25). இவரது மனைவி ஷர்மிளா (22). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பிரவீன், ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பிறகு பிரவீன் வீட்டிலேயே ஷர்மிளா வசித்து வந்தார். பிரவீன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, கடந்த 14-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந் தேதி ஷர்மிளா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஷர்மிளா எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில், தனது சாவுக்கு தந்தை துரைக்குமார், தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான் காரணம் என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று புழல் ஆர்.டி.ஓ. இப்ராகீம், ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது ஷர்மிளாவின் மாமியார் சித்ரா, இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். அதுவரையில் ஷர்மிளாவின் உடலை பிரேத பரிசோதனை நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததுடன், அப்படியே பிரேத பரிசோதனை நடத்தினாலும் உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளாவின் மாமியார் சித்ரா, "ஆர்.டி.ஓ. என்னிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது ஷர்மிளாவின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க என்னிடம் கையொழுத்து கேட்டனர். நான் அதற்கு மறுத்து விட்டேன். ஷர்மிளா தனது தற்கொலைக்கு காரணம் தனது பெற்றோர்தான் என கடிதத்தில் கூறியுள்ளார். அவர்களிடம் உடலை எப்படி கொடுக்க முடியும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். கடிதத்தில் குறிபிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றும் வரை ஷர்மிளாவின் உடலை பிரேத பரிசோதனை நடத்த அனுமதிக்கப்போவதில்லை. அப்படி நடத்தினாலும் உடலை வாங்க போவதில்லை" என்று அவர் கூறினார்.

இதனால் ஷர்மிளாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் ராஜீவ்காந்தி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்