தேனி
தேனியில் மயானத்தில் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு: பிணத்தை அடக்கம் செய்யாமல் மக்கள் சாலை மறியல்
|தேனியில் மயானத்தில் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிணத்தை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டி நேருஜி ரோட்டில் பொது மயானம் உள்ளது. இந்த மயான வளாகத்தில் ஏற்கனவே ஒரு கழிப்பிடம் உள்ளது. தற்போது அங்கு புதிதாக கழிப்பிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டதால் அவருடைய உடலை மயானத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
இதற்காக கழிப்பிடம் கட்டும் பணிகள் நடந்து வரும் பகுதியில் குழி தோண்டினர். இதற்கு கழிப்பிட கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இறந்தவரின் உறவினர்களும், அப்பகுதியை சேர்ந்த மக்களும் பொம்மையகவுண்டன்பட்டியில் தேனி-பெரியகுளம் சாலையில் மறியல் செய்தனர். மயானத்தில் கழிப்பிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கழிப்பிட கட்டுமான பணிகளை நிறுத்தி மயானத்தை மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, துணைத்தலைவர் செல்வம் மற்றும் கவுன்சிலர்கள், போலீசார் அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மயானத்தில் நடக்கும் கட்டுமானத்தை அகற்ற வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.
சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து மயானத்தில் கழிப்பிடம் கட்டும் பணி நிறுத்தப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் தாங்கள் தோண்டிய இடத்திலேயே பிணத்தை அடக்கம் செய்வோம் என்று கூறி கலைந்து சென்றனர். அதன் பிறகு பிணம் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மறியல் காரணமாக பெரியகுளம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.