ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 3-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
|நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைகளை அடைத்து ஆதரவு தெரிவிக்க வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக நேற்று விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைகளை அடைத்து ஆதரவு தெரிவிக்க வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
3-வது நாளாக உண்ணாவிரதம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெருந்துறை வாய்க்கால் மேடு கூரபாளையம் பிரிவு அருகே விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் உண்ணாவிரத பந்தலில் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.
இந்த போராட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத் ஆகியோர் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.
கடையடைப்பு
இதேபோல் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து தங்களது ஆதரவை தெரிவித்து கொண்டனர். மேலும் நல்லாம்பட்டி தாசம்புதூரில் இருந்து விவசாயிகள் 40 பேர் 20 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக வந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
இதற்கிடையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வணிக அமைப்பினர் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கீழ்பவானி வாய்க்கால் பாசன வசதி பெறும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.