நோட்டீஸ் கொடுக்காமல் உறுப்பினர்களை நீக்க முடியாது ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம்
|நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெறாமல், கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
சென்னை,
அ.தி.மு.க., பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-
கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாக இருந்தால், அவருக்கு நோட்டீஸ் கொடுத்து, அவரது விளக்கத்தை பெற்று, அதன்பின்னரே இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியும். இதுதான் அ.தி.மு.க.வின் விதி. இந்த விதியை மாற்ற முடியாது. விதியை மீறி பொதுக்குழு செயல்பட முடியாது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா
இந்த கட்சியில் பொதுச்செயலாளர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்களை நோட்டீஸ் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கி இருக்கலாம். அவர்கள் மீதுள்ள மரியாதையின் காரணமாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வழக்கு தொடராமல் இருந்து இருக்கலாம்.
அதற்காக அவர்களைப்போல, தானும் நோட்டீஸ் கொடுக்காமல் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி செயல்பட முடியாது. எடப்பாடி பழனிசாமி ஒன்றும் எம்.ஜி.ஆரோ., ஜெயலலிதாவோ கிடையாது.
ஒப்பந்தம்
கட்சி விதிகளுக்கு எதிராக கட்சியில் இருந்து நீக்கினால், அதை எதிர்த்து வழக்கு தொடர ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையும், அதிகாரமும் உள்ளது. கட்சியின் விதிகளை உருவாக்கி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய பின்னர், அந்த விதிதான் கட்சிக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் ஆகும். எனவே, கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதையும், பொதுக்குழு தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
சட்டப்படி செல்லாது
இவரை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டார். இதையடுத்து, மனுதாரர்கள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல் அப்துல் சலீம் ஆஜராகி, "கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது பதவிக்காலம் 2026-ம் ஆண்டு வரை உள்ளது. இதற்கான தீர்மானத்தை பொதுக்குழுவில் வைக்காமல் நிராகரித்து விட்டோம் என்று கூறி 2 பதவிகளையும் ரத்து செய்தது சட்டப்படி செல்லாது. எனவே, பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
தள்ளிவைப்பு
மற்றோரு மனுதாரர் ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் மூத்த வக்கீல் ஸ்ரீராம் வாதிட்டார். அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதங்களும் முடிவடைந்து விட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அன்று இருதரப்பினரும், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர்.