< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் மோடி பெயரில் தங்கரதம் இழுத்து ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில் மோடி பெயரில் தங்கரதம் இழுத்து ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு

தினத்தந்தி
|
19 March 2024 10:21 AM IST

பழனி முருகன் கோவிலில் பிரதமர் மோடி பெயரில் பணம் கட்டி ஓ.பன்னீர்செல்வம் தங்கத்தேர் இழுத்தார்.

பழனி,

அ.தி.மு.க. கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்து நேற்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அடிவாரம் பகுதியில் அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து கிரிவலப்பாதை வரை ஓ.பன்னீர்செல்வம் நடந்து வந்தார்.

இதைத்தொடர்ந்து பேட்டரி கார் மூலம் ரோப்கார் நிலையம் வந்த அவர், ரோப்கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றார். அதையடுத்து சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை தரிசனம் செய்தார். பின்னர் போகர் சன்னதிக்கு சென்றும் வழிபட்டார்.அதையடுத்து இரவு 7 மணிக்கு நடைபெற்ற தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டு, தங்கரதம் இழுத்து வழிபட்டார். இதற்காக 2 கட்டளை சீட்டு பதிவு செய்திருந்தார். அதாவது ஒன்று தனது பெயரிலும், மற்றொன்று பிரதமர் மோடி பெயரிலும் பதிவு செய்திருந்தார். தங்கரத புறப்பாட்டை நிறைவு செய்த பின்பு சேலம் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். அவர் அதிகாலையில் நடந்த விஸ்வரூப தீபாராதனை, பின்னர் நடந்த உதய மார்த்தாண்ட அபிஷேகத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து கோவிலில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

மேலும் செய்திகள்