டி.டி.வி.தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு இணைந்து செயல்படப்போவதாக அறிவிப்பு
|அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென சந்தித்தார். அப்போது தொண்டர்களின் விருப்பப்படி அ.தி.மு.க.வை மீட்டு தி.மு.க.வை வீழ்த்த இணைந்து செயல்படுவோம் என இருவரும் தெரிவித்தனர்.
சென்னை,
அ.தி.மு.க. வழக்கில் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சாதகமாக அமைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. செயற்குழுவிலும் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
அ.தி.மு.க. விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்க போகிறார், தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது டி.டி.வி. தினகரன், சசிகலா தரப்பினருடன் இணைந்து செயல்படுவாரா? என்ற கேள்விகள் எழுந்தன. தேவைப்பட்டால் டி.டி.வி. தினகரனை சந்தித்து பேசுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 7 மணிக்கு டி.டி.வி. தினகரனை சந்திக்க போவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரவு 7 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் காரில் அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டிற்கு வந்தனர்.
ஆலோசனை
அவர்களை டி.டி.வி. தினகரன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர் செந்தமிழன் உடன் இருந்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்களிடம் நிருபர்கள், திடீரென்று ஒன்றாக சந்தித்து இருக்கிறீர்களே, என்ன முடிவு எடுத்து இருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
சேர்ந்து செயல்பட முடிவு
இதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இரு இயக்கங்களும் சேர்ந்து செயல்பட முடிவு எடுத்துள்ளோம். எங்களுக்கு ஒரே லட்சியம்தான். எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இயக்கத்தை அதன் உண்மையான கடைகோடி தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் தனித்தனியே செயல்பட்டார்கள். அதே லட்சியத்திற்காக சேர்ந்து செயல்படுவது என்று முடிவு எடுத்துள்ளோம்.
எப்படி கம்யூனிஸ்டுகள் இணைந்து செயல்படுகிறார்களே, அதைபோல் இணைந்து செயல்படுவோம். அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை எண்ணி செயல்படுகிறோம். எனவே கடந்த காலத்தை பற்றி பேச வேண்டாம். நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். எங்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து காத்திருங்கள்.
அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கு பிறகு கூட்டணி உருவாகி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தான் சொல்கிறது. பா.ஜ.க. சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சுயநலம் இல்லை
டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-
எங்களுக்குள் சுயநலம் கிடையாது. கபளீகரம் செய்தவர்களிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுத்து, தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்கள் அ.தி.மு.க.வை வழி நடத்தும் வகையில் அதற்கான முயற்சியில் ஓ.பன்னீர்செல்வமும், நானும் ஈடுபடுவோம்.
தொண்டர்களின் எதிர்பார்ப்பைத்தான் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை எப்போது சந்திப்பீர்கள் என்று எல்லோரும் கேட்டிருந்தார்கள். மனது அளவில் எங்களுக்குள் பகை இல்லை. சில காரணங்களால் பிரிந்திருந்தோம். இருட்டிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை பிடித்துக் கொண்டு நடக்கலாம். எடப்பாடி பழனிசாமி கையை பிடித்துக்கொண்டு நடக்க முடியுமா?
எங்கள் சித்தியை (சசிகலா) சந்திப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது. கூட்டணி பற்றியெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யலாம். எடப்பாடி பழனிசாமி துரோகி, தி.மு.க. எதிரி. அதற்காக தான் ஓரணியில் திரண்டு இருக்கிறோம்.
சீலிப்பர் செல் இருப்பார்கள். எங்களுக்கு தேவையான தகவல்களை அவர்கள் தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.டி.வி. தினகரனை சந்தித்தது ஏன்?
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
சசிகலா, டி.டி.வி. தினகரனை எப்போது சந்திப்பீர்கள் என்று நீங்களே கேட்டு இருக்கிறீர்கள். அதன் அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சசிகலா வெளியூரில் இருக்கிறார். அவரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம்.
ஒன்றாக மாநாடு நடத்துவது குறித்து கேட்கிறீர்கள். உங்கள் நல்ல நோக்கம் நிறைவேறும். அனைத்து தொண்டர்களும் இணைய வேண்டும். தொண்டர்களை இணைத்து புதுப்பொலிவுடன் அ.தி.மு.க.வை நிலைநிறுத்துவோம். அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்துவோம். இதுதான் தொண்டர்களின் விருப்பம்.
எடப்பாடி பழனிசாமி சுயநலத்துடன செயல்படுகிறார். நாங்கள் ஒருமித்த சிந்தனையுடன் செயல்படுகிறோம். அ.தி.மு.க. தொடர்பான வழக்கு முடியவில்லை. கொங்குநாட்டில் மாநாடு நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்,
சபரீசன் சந்திப்பு மரியாதை நிமித்தமானது. நான் கிரிக்கெட் பார்க்க தான் சென்றேன். அரசியல் ரீதியான சந்திப்பு இ்ல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.