ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார்களா? ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி
|ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார்களா? என்று ஜே.சி.டி.பிரபாகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் கலந்து கொண்டு அ.தி.மு.க.வில் நிலவி வரும் உட்கட்சி அதிகார போட்டி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசுகையில், 'எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலும் இதுபோன்ற சோதனைகளை கட்சி சந்தித்து உள்ளது. அதில் இருந்து மீண்டு வந்ததுபோல் தற்போதும் இதில் இருந்து மீண்டு கட்சி முழுமையாக ஓ.பன்னீர்செல்வம் ஆளுமையின் கீழ் வரும் என்று தெரிவித்தார்.
சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டால், அவரும் உடனிருப்பவர்களும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 'அது அவசியமில்லை' என்றும், 'ராஜினாமா செய்ய மாட்டார்கள்' என்றும் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து இன்று வரை அவர் கட்சி நலனை முன்னிறுத்தியே செயல்பட்டு வந்துள்ளதாகவும், பிரதமர் மோடி வற்புறுத்தியதால்தான் துணை முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும், கட்சி நலன் கருதி அவர்கள் சொன்னதையெல்லாம் ஏற்று மறுப்பு சொல்லாமல் கையெழுத்து போட்டு வந்ததாகவும் கூறினார்.
மேலும் கட்சியினரை நீக்கும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம்தான் சட்டப்படி அதிகாரம் இருப்பதாகவும், இதில் சசிகலா, எடப்பாடி பழனிசாமி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு விடுமோ என்று பயப்படுவதாகவும் கூறினார்.
மேலும் கட்சி அலுவலகத்தில் குண்டர்களை குவித்து மோதலை உருவாக்கியது யார்?, எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் என்ன? உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றியும் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு விரிவாகவும், விளக்கமாகவும் ஜே.சி.டி.பிரபாகர் பதில் தெரிவித்துள்ளார்.