மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சாலை வரி உயர்வை திமுக அரசு கைவிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
|மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சாலை வரி உயர்வை திமுக அரசு கைவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சொன்னதை செய்வோம் என்ற பெயரில், மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், மாதம் ஒருமுறை மின் கட்டணம், ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை, ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, 3.5 இலட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புதல், நீட் தேர்வு ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சொல்லாததை செய்வோம் என்ற பெயரில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, வெளிமுகமை மூலம் பணி நியமனம் என்ற வரிசையில் தற்போது சாலை வரியை உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் திட்டங்கள் தீட்டுவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், மக்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதற்காக தி.மு.க. அரசு திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்கள் நலம், ஆட்சிக்கு வந்த பிறகு குடும்ப நலம் என்ற நோக்கத்துடன் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது, வாகனங்களுக்கான சாலை வரி உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு, ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் வாகனங்களுக்கான சாலை வரி உயர்த்தப்படாத நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான வரி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்போது, இரு சக்கர வாகனத்தில் மொத்த விலையில் 8 விழுக்காடு சாலை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை இரண்டாக பிரித்து, ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள வாகனத்திற்கு 10 விழுக்காடு சாலை வரி விதிக்கவும், ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக உள்ள வாகனத்திற்கு 12 விழுக்காடு சாலை வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோன்று, தற்போது பத்து லட்சம் ரூபாய் வரையிலான காருக்கு 10 விழுக்காடு வரியும், பத்து இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட காருக்கு 15 விழுக்காடு வரியும் வசூலிக்கப்படுகிறது. இரண்டு வகையாக உள்ள இந்த வரியை நான்காக பிரித்து, 5 இலட்சம் ரூபாய் வரையுள்ள கார்களுக்கு 12 விழுக்காடு வரியும், 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபாய் வரையுள்ள கார்களுக்கு 13 விழுக்காடு வரியும், பத்து இலட்சம் ரூபாயிலிருந்து 15 இலட்சம் ரூபாய் வரையுள்ள கார்களுக்கு 15 விழுக்காடு வரியும், 20 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட கார்களுக்கு 20 விழுக்காடு வரியும் விதிக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கனரக வாகனங்களின் சாலை வரியும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான பொதுமக்கள் தாங்கள் அலுவலகம் செல்வதற்காக வங்கிகளில் கடன் வாங்கி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்குகின்ற சூழ்நிலையில், கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், ஏற்கெனவே பல்வேறு வரி உயர்வுகளினாலும், விலைவாசி உயர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு சுமையை பொதுமக்கள்மீது திணிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த வரி விதிப்பு இரு சக்கர வாகனத்தின் விலையை 7,000 ரூபாய் வரையிலும், கார்களின் விலையை 25,000 ரூபாய் வரையிலும் உயர்த்தும். இதன்மூலம் தி.மு.க. அரசு ஈவுஇரக்கமற்ற அரசு என்பது மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சாலை வரி என்பது சதவீத அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால், வாகனங்களின் விலை உயர்ந்தாலே சாலை வரியும் உயரும் என்ற நிலையில், அதனுடைய சதவீதத்தை ஏற்றி மேலும் வாகனத்தின் விலையை உயர்த்துவது என்பது கொடுமையிலும் கொடுமை.
ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசின் செயல் வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம். சாதாரண ஏழை, வாகனங்களுக்கான எளிய சாலை மக்களின் வரி நலனைக் கருத்தில் கொண்டு, உயர்வினை தி.மு.க. அரசு கைவிட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.