தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளை பணி நிரந்தரம் செய்யவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
|தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஆஸ்பத்திரிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதுடன், ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் டாக்டர்களும், நர்சுகளும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான டாக்டர்களும், நர்சுகளும் பணியில் இருந்து நீக்கப்பட்டதுதான் மிச்சம்.
உலக செவிலியர் தினத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நர்சுகள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், அந்தளவுக்கு அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நர்சுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இதை அரசு மேற்கொண்டால் பணி தானாகவே நிரந்தரமாகிவிடும் என்றும் நர்சுகள் தெரிவிக்கிறார்கள். இதை நிறைவேற்றவேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.
விடியலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சொல்லிவிட்டு விரக்தியை நோக்கி அனைத்து தரப்பினரையும் தி.மு.க. அரசு அழைத்துச் செல்கிறது. நர்சுகள் கோரிக்கை என்பது தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி மட்டுமல்ல, அரசு சார்பில் கொடுக்கப்பட்ட உத்தரவாதமும் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து நர்சுகளையும் முன்தேதியிட்டு பணி நிரந்தரம் செய்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.