அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
|அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த 2019-ம் ஆண்டு காலவரையற்ற போராட்டமும், உண்ணாவிரதமும் மேற்கொண்ட சமயம், அவர்களை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். அதோடு நிறுத்திவிடாமல், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் தெரிவித்தார்.
தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்து 1.5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அரசு டாக்டர்களின் கோரிக்கையை செவி கொடுத்துக்கூட கேட்க அரசு தயாராக இல்லை.
இந்தநிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 30-ந்தேதி அரசு டாக்டர்கள் மவுன போராட்டம் நடத்த உத்தேசித்து இருந்ததாகவும், போராட்டக்குழு நிர்வாகிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றன. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
எனவே எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அரசு டாக்டர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டக்குழு நிர்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.