< Back
மாநில செய்திகள்
வீடுகளுக்கு மதிப்பு நிர்ணயித்து மக்கள்மீது கூடுதல் சுமையை திணிக்க திமுக அரசு முயற்சி - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மாநில செய்திகள்

வீடுகளுக்கு மதிப்பு நிர்ணயித்து மக்கள்மீது கூடுதல் சுமையை திணிக்க திமுக அரசு முயற்சி - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தினத்தந்தி
|
16 Dec 2023 2:20 PM IST

பத்திரப் பதிவுத்துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 469-ல், நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டை நியாயமாக நிர்ணயிப்பதற்கு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினரிடம் அறிக்கை பெற்று கட்டுமானத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கட்டுமானத் தொழிலில் உள்ள சிக்கல்களை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகள்தான் எடுக்கப்பட்டு வருகின்றன.

2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 01-04-2012 முதல் உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 09-06-2017 அன்று முதல் ஒரே சீராக 33 விழுக்காடு குறைக்கப்பட்டதாகவும், அதே சமயத்தில் விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவு கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு பரிந்துரைத்துள்ளதாகவும், இக்குழுவின் அறிக்கை பெறப்படும் வரை வழிகாட்டி மதிப்பை 08-06-2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்தவும், பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பதிவுத்துறையில் பல கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இது போதாது என்று, அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களில் வீடு விற்பனையின்போது, நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு என்று தனித்தனி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன்படி நிலத்திற்கு ஒன்பது சதவிகிதமும், கட்டிடத்திற்கு நான்கு சதவிகிதமும் வசூலிக்கப்பட்டன. இதுவும் போதாது என்று, நிலம் மற்றும் கட்டிடம் ஒரே பத்திரமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த மாதம் முதல் தேதி முதல் தி.மு.க. அரசு அறிவித்தது. இது மட்டுமல்லாமல், வழிகாட்டி மதிப்பினை கிராம வாரியாக நிர்ணயம் செய்தது. உதாரணமாக மயிலாப்பூர் கிராமம் என்று எடுத்துக் கொண்டால், அது பேசிக், பிரீமியம், அல்ட்ரா பிரீமியம் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு, பேசிக் வீட்டிற்கே ஒரு சதுர அடி 16,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று பிரீமியம் என்றால் 18,000 ரூபாய், அல்ட்ரா பிரீமியம் என்றால் 22,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, சிறிய சிறிய தெருக்களில் 6,000 ரூபாய், 7,000 ரூபாய் என இருந்த வழிகாட்டு மதிப்பீடுகள் எல்லாம் 16,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. அதே சமயத்தில், பெரிய மற்றும் நவநாகரிகமான பகுதிகளில் ஒரு சதுர அடி 25,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்த வழிகாட்டு மதிப்பீடுகள் 22,000 ரூபாயாக குறைக்கப்பட்டன.

அதாவது, ஏழையெளிய, நடுத்தர மக்கள் வசிக்கும் சாதாரண வீடுகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டினை இரட்டிப்பாக உயர்த்தியும், பணக்காரர்கள் வசிக்கும் வீடுகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டினை குறைத்தும் உத்தரவிடுவது என்ன நியாயம்? ஒரு வேளை ஏழையெளிய மக்களை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியோ! தற்போது, இதற்கு கட்டுமானத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, நேற்று முன்தினம் மாண்புமிகு அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் இதனை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், அதே சமயத்தில், நிலங்களில் வழிகாட்டி மதிப்பு போன்று, வீடுகளுக்கு தெரு அடிப்படையில் மதிப்பு நிர்ணயிக்க முடிவெடுத்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதுவும் மக்கள் மீது கூடுதல் சுமையை திணிப்பதற்கான நடவடிக்கையே தவிர வேறொன்றும் இல்லை. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே வழிகாட்டி மதிப்பீடு மற்றும் பதிவுக் கட்டணங்களின் பல வகைகள், பல ரூபங்களில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதனை உயர்த்துவது என்பது கட்டுமானத் தொழிலை சீர்குலைப்பதோடு, ஏழையெளிய மக்களின் வீடு வாங்கும் கனவையும் சிதைத்துவிடும். தற்போதுள்ள சூழ்நிலையில், எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.

கொரோனா தொற்று, பெருவெள்ள பாதிப்பு, விலைவாசி உயர்வு, வரிகள் உயர்வு என பல தொல்லைகளுக்கு மக்கள் ஆளாகியிருக்கிற நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்த அளவுக்கு வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட வேண்டுமென்றும், பத்திரப் பதிவுத்துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டுமென்றும், எந்தவிதமான கட்டண உயர்வையும் அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாமென்றும் முதல்-அமைச்சரை தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்