பா.ஜ.க.-வுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி பேச்சுவார்த்தை
|நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பா.ஜ.க. பேச்சுவார்த்தை நடத்தியது.
சென்னை,
வருகிற நாடாளுடன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த சூழலில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி ஆகியோர் சென்னைக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை சென்னை கிண்டியில் தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த ஆலோசனையில் மீன்வளம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல்கள் குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகள் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, மத்திய மந்திரிகள் தங்கியிருந்த ஓட்டலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 10.35 மணிக்கு வந்தார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் வந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் குழுவினருடன் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி, எல்.முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பா.ஜனதாவுடனான ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அமைப்பது உறுதியானது. ஓ.பன்னீர்செல்வம் தற்போது, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு பா.ஜனதாவுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் குழுவினர் இன்று (திங்கட்கிழமை) பா.ஜனதா குழுவினருடன் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று (திங்கட்கிழமை), சென்னை கமலாலயத்தில் தமிழக பா.ஜனதா தேர்தல் பணிகள் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் பங்கேற்று மாநில நிர்வாகிகளுக்கு நேர்தல் பணிகள் தொடர்பாக தேவையான ஆலோசனைகள் வழங்குகிறார்கள். தொடர்ந்து தமிழக பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுகிறார்கள்.