விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க அரசு தவறிவிட்டது -ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
|விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடந்த 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் எதுவுமே குறைந்த விலையில் எளிதாக கிடைப்பதில்லை. மிகுந்த சிரமத்துக்கு பின்னர்தான் அனைத்து பொருட்களுமே கிடைக்கின்றன என்பதுதான் கள யதார்த்தம்.
விலை உயர்வுக்கு மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், சர்வதேச சந்தை நிலவரம், உள்நாட்டு விளைச்சல் போன்றவை காரணமாக இருந்தாலும், முக்கியமான காரணமாக கருதப்படுவது பதுக்கல்.
உதாரணத்துக்கு ஏப்ரல் மாதத்தில் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது ரூ.150-க்கு உயர்ந்திருக்கிறது என்றால், விளைந்த தக்காளியை பதுக்கி வைத்து, கொள்ளை லாபம் சம்பாதிப்போர் மீது நடவடிக்கை எடுக்காததும், அதை பாதுகாத்து வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாததும்தான் காரணம்.
தவறிவிட்டது
இந்த கடமையை செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இந்த கடமையை செய்திருந்தால், ஓரளவுக்கு விலைவாசி கட்டுக்குள் இருந்திருக்கும். தி.மு.க. அரசின் தற்போதைய நடவடிக்கை என்பது தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை-எளிய மக்கள்தான். இது கடும் கண்டனத்துக்குரியது.
இனி வருங்காலங்களில் மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவும், விளைந்த பொருட்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.