உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக ஒ.பன்னீர் செல்வம் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு
|உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஒ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், "உள்ளாட்சி தேர்தலில் உள்ள காலி இடங்களை நிரப்புவது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என்றும் நீங்கள் தயாராக இருந்தால் அதில் கையெழுத்திட்டு உடனே அனுப்புமாறு எடப்பாடி பழனிசாமிக்கு, ஒ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். நாளை மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட்டால் இரட்டை இலை சின்னம் நமது வேட்பாளர்களுக்கு கிடைக்கும். இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட எனக்கு சம்மதம் என்று ஒ. பன்னீர் செல்வம் அதில் தெரித்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஒ.பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி பெறாமல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.