< Back
மாநில செய்திகள்
இரும்புச்சத்து குறைபாடுடைய 800 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

இரும்புச்சத்து குறைபாடுடைய 800 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

தினத்தந்தி
|
17 Dec 2022 12:14 AM IST

மாதந்தோறும் இரும்புச்சத்து குறைபாடுடைய 800 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்படுகிறது என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

காரியாபட்டி,

மாதந்தோறும் இரும்புச்சத்து குறைபாடுடைய 800 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்படுகிறது என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

கா்ப்பிணிகளுக்கு பரிசு

காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் கர்ப்பிணிகளின் இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் 30 கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

மேலும் மகப்பேறு அடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் தாய்மார்களுக்கு, தாய், குழந்தை மற்றும் கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை கலெக்டர் மேகநாதரெட்டி பரிசாக வழங்கினார்.

இரும்பு பெண்மணி திட்டம்

பின்னர் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசு கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டையும் இரு கண்களாக பாவித்து திட்டங்களை தீட்டி, இந்தியாவிற்கே முன் உதாரணமாக செயலாற்றி வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனை முக்கிய நோக்கமாக கொண்டு, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக இரும்பு பெண்மணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கர்ப்பிணிகளின் இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் மாவட்டத்தில் 800 இரும்புச்சத்து குறைபாடுடைய கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

3 மாதம்

இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களான கருப்பு உலர் திராட்சை, உலர் அத்திபழம், சிவப்பு அவல், புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து பொருட்கள் அடங்கிய இந்த தொகுப்பு மாதம் ஒருமுறை 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, அரசு அலுவலர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்