திருச்சி
வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
|வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் 16 வட்டாரங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சுகாதார பணிகள் வாயிலாக ரத்த பரிசோதனை செய்ததில் கடுமையான ரத்த சோகை குறைபாடுடைய 100 வளரிளம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி 100 வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகையில் இருந்து விடுபட பேரீச்சம்பழம், தேன்நெல்லி, கருப்பு உலர்திராட்சை, செவ்வாழை, கொய்யாப்பழம், ரத்த சோகை குறித்த துண்டு பிரசுரம் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி, வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை குறித்தும், அதில் இருந்து விடுபட பின்பற்றப்படும் ஊட்டச்சத்து முறை குறித்தும் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நித்யா, இணை இயக்குனர் (ஊரக நலப்பணிகள்) லட்சுமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.