விருதுநகர்
சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க நூதன பிரசாரம்
|சிவகாசியில் சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க நூதன முறையில் மாநகராட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 48 வார்டுகளிலும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் நேரடியாகவீடுதோறும் சென்று வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையிலும் சிலர் சாலை ஓரங்களில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் நகரின் அழகு கெடுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், ஆணையாளர் சங்கரன் ஆலோசனையின் பேரில் குப்பை கொட்டும் இடங்களில் எல்லாம் வண்ணக்கோலம் வரைந்து நகரின் அழகை காப்பதுடன் சுகாதார கேட்டினையும் தடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வடக்கு ரத வீதி, திருத்தங்கல் காளியம்மன் கோவில் தெரு, சிவகாசி பி.கே.எஸ்.ஏ.ரோடு, முஸ்லிம் தைக்கா தெரு, திருத்தங்கல் திருவள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் சாலையோர குப்பைகள் அகற்றப்பட்டன. இதனை மாநகராட்சி சுகாதார அலுவலர் திருப்பதி, சுகாதார ஆய்வாளர்கள் அபுபக்கர் சித்திக், பாண்டியராஜன், முத்துப்பாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த பகுதிகளில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் மூலம் வண்ணக்கோலங்கள் போடப்பட்டன. மேலும் நகரின் பிரதான சாலைகளில் குப்பைகளை போடக்கூடாது கால்வாய்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.