< Back
மாநில செய்திகள்
கொரோனாவில் பணியாற்றிய நர்சுகள் பணி நிரந்தரம் கோரி 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டம்
மாநில செய்திகள்

கொரோனாவில் பணியாற்றிய நர்சுகள் பணி நிரந்தரம் கோரி 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டம்

தினத்தந்தி
|
3 Jan 2023 12:16 AM IST

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2,472 நர்சுகளை பணிநீக்கும் அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவ தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட நர்சுகள் கடந்த 2020-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டனர்.

இதனிடையே இவர்களுக்கு முன்பு 3,250 நர்சுகள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு, பிறகு ஒப்பந்த நர்சுகளாக பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட சுமார் 1,331 டாக்டர்கள் நிரந்தர டாக்டர்களாக பணிமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வழங்கியது.

2 ஆண்டுகள் 7 மாதங்கள்

இந்த நிலையில் சுமார் 3,200 நர்சுகள் கொரோனா முதல் அலை, 2-வது மற்றும் 3-வது அலை என தொடர்ந்து 2 ஆண்டுகள் 7 மாதங்களாக பணிநீட்டிப்பு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இதனையடுத்து இவர்கள் அனைவரும் மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பணிமாற்ற ஆணை ரத்து செய்யப்பட்டது.

அரசாணை

இதனையடுத்து கடந்த டிசம்பர் 30-ந் தேதி அரசாணை ஒன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அதில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2,472 நர்சுகள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கொரோனா நர்சுகள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகள் 7 மாதங்களாக எங்கள் உயிரையும் துச்சம் என கருதி பணி செய்து வந்துள்ளோம். எங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து வெவ்வேறு மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களாக சம்பளம் வாங்காமல் வேலை பார்த்து வருகிறோம்.

உண்ணாவிரத போராட்டம்

ஆனால் தமிழக அரசு எங்களை ஏமாற்றி பணியில் இருந்து நீக்கி அதை மறைக்கும் விதமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும் என்கிறார்கள். அவ்வாறு வழங்கப்படும் பணியானது நாங்கள் சாகும் வரை தற்காலிக நர்சுகளாகவே (ஒவ்வொரு 11 மாதத்துக்கு ஒரு முறை 'சர்வீஸ் பிரேக்அப்') செய்து, நாங்கள் நிரந்தர பணியாளராக மாறவே முடியாத வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இந்த மனிதாபிமானமற்ற செயலை கலைக்கும் வகையில் தமிழக அரசு இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும் 3,250 தற்காலிக நர்சுகள் மற்றும் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 1,331 டாக்டர்களை பணி நிரந்தரம் செய்தது போலவே, எங்களுக்கும் ஒப்பந்த பணி ஆணை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். இதுதொடர்பாக வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்